குஜராத் மாநிலத்தில் அவலம்; நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி ஆணவ படுகொலை: 2 பேர் கைது; தந்தைக்கு போலீஸ் வலை
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி ஆணவ படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான அவரது தந்தையை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். குஜராத் மாநிலம் பானஸ்கந்தா மாவட்டத்தில் தராட் போலீஸ் நிலையத்தில் கடந்த 6ம் தேதி ஹரேஷ் சவுதாரி என்பவர் ஒரு புகார் அளித்தார். அதில், ‘18 வயதான ஒரு இளம்பெண் என்னுடன் பழகி வந்தார். அவரை திடீரென காணவில்லை. அவரது தந்தை செண்டாபாய் படேல் மற்றும் உறவினர்கள் 2 பேரால் இளம்பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். மேலும் நீதிமன்றத்திலும் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்தார். இதையடுத்து மாணவியின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, மாணவி கடந்த ஜூன் 24ம் தேதி இறந்ததும், அதை போலீசுக்கு தெரிவிக்காமல் இறுதி சடங்கு செய்ததும், அதற்கு பிறகு மாணவியின் தந்தை தலைமறைவானதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் மாணவியின் மரணம் குறித்த வெளியான அதிர்ச்சி தகவல்கள் வருமாறு: கொலையான மாணவி, நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். அவர், கடந்த மே மாதத்தில் தேர்வை எழுதியுள்ளார். அதன் முடிவில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சியும் பெற்றுள்ளார். இதையடுத்து மருத்துவ படிப்பில் சேர தயாராகி வந்துள்ளார். இதற்கிடையே ஹரேஷ் சவுதாசரி என்பவருடன் மாணவி பழகியுள்ளார். ஹரேஷ் சவுதாரி திருமணமானவர். ஒரு குழந்தையும் உள்ளது. மாணவி தராட் நகரில் இருந்து பலான்பூருக்கு படிக்க செல்லும்போது, பைக்கில் அழைத்து சென்றுள்ளார். அப்போது ஹரேசுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அதுவே நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் கடந்த மே மாதம் அகமதாபாத் சென்று சேர்ந்து வாழ்வது பற்றி முடிவு செய்துள்ளார். மேலும் அடிக்கடி ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். ராஜஸ்தானில் அவர்களை ஒரு ஓட்டலில் பார்த்த போலீசார், மாணவியை அவரது உறவினர் சிவராம்பாயிடம் ஒப்படைத்துள்ளனர். அதன்பிறகுதான் இந்த விவரம் தெரியவர, மாணவியை உறவினர்கள் கண்டித்துள்ளனர். இதற்கிடையில் ஹரேஷ் மற்றொரு வழக்கிற்காக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். அவர், ஜூன் 21ம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்தபிறகு மாணவிக்கு செல்போன் மற்றும் சமூக வலைத்தளத்தில் மெசேஜ் அனுப்பியுள்ளார். எந்த பதிலும் வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஹரேஷ், தனது வக்கீல் உதவியுடன் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இதற்கிடையே மாணவி ஆணவ கொலை செய்யப்பட்டு, இறுதி சடங்கு நடக்கும் செய்தி ஜூன் 25ம் தேதி அவருக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் போலீசில் புகார் அளித்தார். கொலை நடப்பதற்கு முன்பு, தாண்டியா கிராமத்தில் சிவராம்பாய் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த மாணவி ஜூன் 24ம் தேதி பாலில் மயக்க மருந்து கலந்து கொடுக்கப்பட்டு பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு விசாரணையில் தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவராம்பாய் மற்றும் நரன்படேல் ஆகியோரை கைது செய்துள்ளனர். மாணவியின் தந்தை செண்டாபாய் தலைமறைவாக உள்ளார். அவரை தேடி வருகின்றனர்.