ஆணவக் கொலையை தடுக்க தனிச் சட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு: கோரிக்கை மனுவை பரிசீலிப்பதாக முதல்வர் உறுதி
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்களான திருமாவளவன், பெ.சண்முகம், முத்தரசன் ஆகியோர் திடீரென சந்தித்து பேசினர். அப்போது, ஆணவக் கொலையை தடுக்க தனிச் சட்டம் இயற்ற கோரி வலியுறுத்தி உள்ளனர். ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை திமுக கூட்டணி கட்சி களான விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சண்முகம் ஆகிய மூவரும் நேற்று காலை சந்தித்து பேசினர். அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. அப்போது நெல்லை கவின் ஆணவக் கொலை விவகாரம் தமிழ்நாடு முழுவதும் விவாதமாகியுள்ள நிலையில், தமிழகத்தில் ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என மூன்று கட்சி தலைவர்களும் இணைந்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பான மனுவையும் அவரிடம் அளித்தனர்.
வர உள்ள சட்டப் பேரவை கூட்டத் தொடரில் இதுதொடர்பான சட்டம் கொண்டு வருவது குறித்து முதல்வர் சந்திப்பின் போது வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தனிச் சட்டம் கொண்டு வருவது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் அவர்களிடம் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. முதல்வரை சந்தித்த பின்பு கூட்டணி கட்சி தலைவர்கள் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்): தமிழகம் முழுவதும் ஆணவ கொலைகள் சம்பந்தமாக ஒரு விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை முதல்வரிடம் முன்வைத்தோம். அவர் பரிசிலீப்பதாக உறுதி அளித்தார்.
முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): சாதி ஆணவ படுகொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகவும் கவலைக்குரியது. இதை தடுக்க வேண்டும் என்ற முறையில் ஒரு கோரிக்கை விண்ணப்பத்தை கையெழுத்திட்டு முதல்வரிடம் கொடுத்துள்ளோம். அதை அவர் பரிசிலீப்பதாக உறுதி அளித்துள்ளார். அதன் தேவையை அரசும் உணர்ந்துள்ளது, விரைவாக ஒரு சட்டம் நிறைவேற்றுவது நல்லது.
திருமாவளவன் (விசிக தலைவர்): ஏற்கனவே இருக்கிற சட்டம் போதுமானதல்ல. அதற்காக இன்று முதல்வரை சந்தித்து கொடுத்த கோரிக்கை மனுவை அளித்தோம். தனிச்சட்டம் வேண்டும் என தேசிய பெண்கள் ஆணையமும் வலியுறுத்தி உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.