ஆணவ கொலையை தடுக்க தனிச்சட்டம்: சண்முகம் வலியுறுத்தல்
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறை மாவட்டம், அடியாமங்கலம், பெரிய தெருவைச் சேர்ந்த வைரமுத்துவும் அதே பகுதியில் வசித்து வரும் மாலினி என்பவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதை அறிந்த மாலினியின் பெற்றோர் வேறு ஒருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் மாலினியின் சகோதரர்கள் குணால் மற்றும் குகன் ஆகியோர் வைரமுத்துவை கடுமையாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
புகாரை விசாரித்த காவல்துறையினர் வைரமுத்து மற்றும் அவரது பெற்றோருடன் மாலினியை அனுப்பி உள்ளனர். இந்நிலையில் கடந்த 15ம்தேதி வைரமுத்து பணி முடிந்து வீடு திரும்பிய போது அவரை வழிமறித்த மாலினியின் சகோதரர்கள் குகன், குணால் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்துள்ளார்கள். வைரமுத்துவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். மேலும் தொடர்ச்சியாக நிகழும் இத்தகைய சாதிய ஆணவப்படுகொலைகளை தடுக்கும் வகையில் தனிச்சட்டம் கொண்டு வர வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.