ஹாங்காங் சிக்ஸஸ் கிரிக்கெட் தொடர்; இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டன்: அஸ்வின் ஆடுவதால் ரசிகர்கள் பரவசம்
ஹாங்காங்: சீனாவின் ஹாங்காங் நகரில் நவம்பர் 7ம் தேதி ஹாங்காங் சிக்ஸஸ் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, ஹாங்காங், வங்கதேசம் என உலகின் முன்னணி கிரிக்கெட் அணிகள் உட்பட மொத்தம் 12 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கவுள்ளதால் இந்த தொடர் கிரிக்கெட் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் கேப்டனாக முன்னாள் இந்திய வீரரும், விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணிக்காக கடந்த 2004ம் ஆண்டு களம் இறங்கிய தினேஷ் கார்த்திக், 26 டெஸ்ட், 94 ஒருநாள், 60 டி20 போட்டிகளில் விளையாடி 3 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களைச் சேர்த்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஓய்வை அறிவித்த அவர் ஐபிஎல் தொடரில் 257 போட்டிகளில் விளையாடி 4,842 ரன்களைக் குவித்ததோடு, கேகேஆர் அணியின் கேப்டனாக பணியாற்றி தனது சிறப்பான பங்களிப்பை அளித்தார்.
இந்நிலையில் ஹாங்காங் சிக்ஸஸ் தொடருக்கான இந்திய அணியில், சமீபத்தில் ஓய்வு பெற்ற சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான ரவிச்சந்திரன் அஸ்வினும் இடம் பிடித்துள்ளார்.
இந்திய அணியில் கடந்த 2010ம் ஆண்டு அறிமுகமான அஸ்வின் 106 டெஸ்ட், 116 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளில் விளையாடி 4 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களையும், 700 க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். ஐபிஎல் தொடரில் 221 போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், 187 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். கடந்தாண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த அஸ்வின், ஐபிஎல், டிஎன்பிஎல் போன்ற உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி வந்தார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி ஐபிஎல் லில் இருந்து திடீரென ஓய்வை அறிவித்த அஸ்வின், தற்போது ஹாங்காங் தொடரில் விளையாட உள்ளது அவரின் ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.