ஹாங்காங் ஓபன் டென்னிஸ்: எம்போகோ சாம்பியன்; 2வது பட்டம் வென்று அசத்தல்
ஹாங்காங்: ஹாங்காங் நகரில் ஹாங்காங் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடந்து வந்தன. கடந்த சனிக்கிழமை நடந்த முதல் அரை இறுதிப் போட்டியில் கனடாவை சேர்ந்த விக்டோரியா எம்போகோ, சக நாட்டு வீராங்கனை லெய்லா பெர்னாண்டசை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு அரை இறுதியில் ஆஸ்திரேலியா வீராங்கனை மாயா ஜாய்ன்டை வீழ்த்தி, ஸ்பெயின் வீராங்கனை கிறிஸ்டினா புக்சா இறுதிக்கு தகுதி பெற்றார். இந்நிலையில், கிறிஸ்டினா (27), எம்போகோ (19) இடையிலான இறுதிப் போட்டி, நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. போட்டியின் துவக்கம் முதல் இரு வீராங்கனைகளும் அதிரடியாக ஆடியதால் முதல் செட்டை 7-5 என்ற புள்ளிக் கணக்கில் எம்போகோ கைப்பற்றினார். 2வது செட்டில் இருவரும் ஆக்ரோஷமாக விட்டுக் கொடுக்காமல் மோதினர். அதனால் டைபிரேக்கர் வரை நீண்ட அந்த செட்டை 7-6 (11-9) என்ற புள்ளிக் கணக்கில் கிறிஸ்டினா வசப்படுத்தினார். அதைத் தொடர்ந்து வெற்றியைத் தீர்மானிக்கும் வகையில் நடந்த 3வது செட்டில் சாதுரியமாக ஆடிய எம்போகோ 6-2 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை வென்றார். அதன் மூலம் 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய எம்போகோ சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இந்தாண்டில் அவர் வெல்லும் 2வது டபிள்யுடிஏ பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.