ஹாங்காங் ஓபன் பேட்மின்டன் சிராக், சாத்விக் இணை அரை இறுதிக்கு தகுதி: மலேசியா வீரர்களை வீழ்த்தி அபாரம்
கவ்லூன்: ஹாங்காங் ஓபன் பேட்மின்டன் ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்திய வீரர்கள் சிராக் ஷெட்டி, சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி இணை அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஹாங்காங்கில் ஹாங்காங் ஓபன் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த சிராக் ஷெட்டி, சாத்விக் ரங்கிரெட்டி இணை, மலேசியாவை சேர்ந்த யாப் ராய் கிங், வான் முகம்மது ஆரிப் ஷகாருதீன் இணையுடன் மோதியது. இந்த போட்டியில் இரு நாட்டு வீரர்களும் சரிக்கு சமமாக ஆக்ரோஷத்துடன் மோதினர்.
முதல் செட்டில் அபாரமாக ஆடிய இந்திய வீரர்கள் 21-14 என்ற புள்ளிக் கணக்கில் வென்றனர். அதைத் தொடர்ந்து 2வது செட்டில் கடும் இழுபறி நேரிட்ட நிலையில், மலேசியா வீரர்கள், 22-20 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினர். அதன் பின் வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட் போட்டி பெரியளவில் எதிர்பார்ப்புடன் நடந்தது. அந்த செட்டில் சுதாரித்து ஆடிய இந்திய வீரர்கள், 21-16 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினர். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வென்ற சிராக், சாத்விக் இணை, அரை இறுதிக்கு முன்னேறியது.