ஹாங்காங்கில் சரக்கு விமானம் கடலில் விழுந்து விபத்து: 2 ஊழியர்கள் பலி
ஹாங்காங்: ஹாங்காங் நாட்டில் சரக்கு விமானம் கடலில் விழுந்த விபத்தில் 2 ஊழியர்கள் உயிரிழந்தனர். துருக்கியை தளமாக கொண்ட ஏசிடி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 747 ரக சரக்கு விமானம் நேற்று முன்தினம் அதிகாலை 3.50 மணிக்கு துபாயில் இருந்து ஹாங்காங்கின் சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றது.
அந்த விமானம் ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, ஓடுபாதையில் இருந்து விலகி சென்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமான ஊழியர்கள் இரண்டு பேர் பலியாகினர். காயமடைந்த நான்கு பேர் பத்திரமாக மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இதுகுறித்து விமான போக்குவரத்து கண்காணிப்பு அதிகாரிகள் கூறுகையில், “விபத்துக்குள்ளான போயிங் 747 ரக சரக்கு விமானம் 32 ஆண்டுகள் பழமையானது. இது முதலில் பயணிகள் ஜெட் விமானமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் சரக்கு விமானமாக மாற்றப்பட்டது” என்றனர்.