தேன் வளைக்கரடி (Honey badger)
தேன் வளைக்கரடி (honey badger) என்பது கீரிக் குடும்பத்தைச் சேர்ந்த சிற்றினம் ஆகும். தேன் வளைக்கரடியானது ஏனைய வளைக்கரடி இனங்கள் போன்ற தோற்றத்தில் இருக்காது. மரநாயின் உடல் தோற்றத்தைக் கொண்டு காணப்படுகின்றது. இது முதன்மையாக ஊனுண்ணி வகையாக காணப்படுவதோடு, இதன் தடிப்பான தோல் மற்றும் இதன் மூர்க்கமான தற்காப்பு திறன்களினால் கொன்றுண்ணி வகையாக காணப்படுகின்றது.
தேன்வளைக்கரடிகள் மண்ணுக்குள் குகை தோண்டி அதற்குள் வாழ்கிற உயிரினம். ஆப்பிரிக்கா, தென்மேற்கு ஆசியா, இந்திய உபகண்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கீரி வகையைச் சேர்ந்த சிற்றினம். மரநாயின் உடல் தோற்றத்தைக் கொண்டு காணப்படுகின்றது. அதிகபட்சமாக 24 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியது. இதன் இனப்பெருக்க காலம் ஆறு மாதங்கள். ஒரே நேரத்தில் இரண்டு குட்டிகள் ஈனும். தேன் வளைக்கரடிகளின் குட்டிகள் சர்வைவல் பற்றி கற்றுக் கொள்ள தாயுடன் பயணிக்கின்றன. தேன் வளைக்கரடிகள் தங்களின் குட்டிகளை இரண்டு வருடங்கள் வரை உடனிருந்து வளர்க்கும். எப்படி எதிரிகளை எதிர்கொள்வது, அவற்றிடமிருந்து எப்படித் தப்பிப்பது எனச் சகலத்தையும் கற்றுக் கொடுத்தபிறகே குட்டிகளைத் தனி யாகச் செல்லவிடும்.
யாரைக் கண்டும் பயப்படாத, உயிரைப்பற்றிக் கவலைப்படாத ஒரே விலங்கு தேன் வளைக்கரடி. எதிரில் இருப்பது மானாக இருந்தாலும் சிங்கமாக இருந்தாலும் எதிர்த்து நிற்கும். அதன் இயல்பே எதிர்த்து நிற்பதுதான். பசித்தால் பக்கத்தில் இருப்பது நாகப் பாம்பாக இருந்தாலும் ஒரே கடியில் கடித்துக் கொன்று விட்டுத் தூங்கிவிடும். 30 நிமிடங்கள் கழித்து எழுந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் தன்னுடைய குகைக்குள் சென்றுவிடும். உலகின் கொடிய விஷமுள்ள பாம்புகளான நாகப்பாம்பு, கறுப்பு மாம்பா என எந்தப் பாம்பாக இருந்தாலும் சில நிமிடங்களில் சரியாகப் பாம்பின் தலையைப் பிடித்துக் கடித்துவிடும். தேன் வளைக்கரடிக்கும் பாம்புக்குமான சண்டையில் பாம்பு கரடியை நான்கைந்து முறை கொத்தினாலும் தோல் கடினமாக இருப்பதால் பாம்பின் விஷம் கரடியை எதுவும் செய்வதில்லை. தேன் என்றால் எத்தகைய சாகசத்தையும் இவ்வகை கரடிகள் நிகழ்த்தும். மர உச்சியிலோ, மலை உச்சியிலோ இருக்கிற தேன்கூடுகளை அடையாளம் கண்டு அவற்றைக் கரடிகள் காலி செய்துவிடுகின்றன. தேன்கூடுகளைச் சேதப்படுத்தும்போது கரடி தன்னுடைய காதுகளை மூடிக்கொள்ளும். அதன் தோல் அடர்த்தி காரணமாக தேனீக்களால் கரடியை விரட்ட முடியாமல்போய்விடுகிறது. அதிக மோப்ப சக்தி கொண்ட தேன் வளைக்கரடிகள் எளிதாக எதையும் கண்டுபிடித்துவிடும். அதனாலேயே இவை தேன் வளைக்கரடிகள் என அழைக்கப்படுகின்றன.