ஆணவக்கொலை தடுக்க தனிச்சட்டம் செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறை மாவட்டம், அடியாமங்கலத்தைச் சேர்ந்தவர் வைரமுத்து, அதேபகுதியில் வசித்து வரும் மாலினி என்பவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் பெண்ணின் தாயார் மாற்று சாதியைச் சேர்ந்தவர். இதனால், தனது சாதியில் உள்ள அவருக்கு வேறு ஒருவருடன் மாலினிக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
இத்திருமணத்திற்கு இடையூறாக வைரமுத்து இருக்கிறார் என்ற ஒரே காரணத்தால் அவரை அரிவாளால் தாக்கி கொடூரமாக படுகொலை செய்துள்ளனர் பெண்ணின் வீட்டார். ஏற்கனவே, இக்காதல் விவகாரம் காவல்துறை வரைக்கும் சென்ற நிலையில் இப்படுபாதகச் செயலை செய்துள்ளனர். இச்சம்பவம் சமூக நீதிக்கும் மனித உரிமைக்கும் நேரடியான சவாலாகும். இதுவும் சாதிய ஆவண படுகொலை தான்.
இச்செயலை செய்தவர்களை வன்மையாகக் கண்டிக்கின்றேன். படுகொலையில் ஈடுபட்டவர்கள் மீது வன்கொடுமை வழக்கு பதிந்து கடுமையான தண்டனை பெற்றுத் தர காவல்துறையை கேட்டுக் கொள்கிறேன். மேலும் தொடர்ச்சியாக நிகழும் இத்தகைய சாதிய ஆணவப் படுகொலைகளை தடுக்கும் வகையில் தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.