ஐந்தே மாதங்களில் முடிந்த திருமண பந்தம்: விவாகரத்து பெற்ற ஹாலிவுட் நடிகை
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகையும், ‘ஹன்னா மான்டேனா’ தொடர் மூலம் புகழ்பெற்றவருமான எமிலி ஆஸ்மென்ட்டிற்கும் (33), இசைக் கலைஞரான ஜாக் ஆண்டனி ஃபரினாவிற்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணம் ஆன இரண்டு மாதங்களுக்குள்ளாகவே இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகப் பிரிந்தனர்.
கடந்த மார்ச் மாதம் எமிலி ஆஸ்மென்ட் லாஸ் ஏஞ்சல்ஸ் உயர் நீதிமன்றத்தில் விவாகரத்துக் கோரி மனு தாக்கல் செய்தார். ஐந்து மாதங்களுக்கும் குறைவாகவே நீடித்த இவர்களது திருமண வாழ்க்கையில் குழந்தைகள் யாரும் இல்லை. இந்நிலையில் எமிலி ஆஸ்மென்ட்டின் விவாகரத்து சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. அவரும், அவரது கணவரான ஜாக் ஆண்டனி ஃபரினாவும் பிரிந்து வாழ ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், நேற்றுடன் அந்தக் கெடு முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவர்களது திருமணத்தை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதன் மூலம், அவர்களது குறுகிய கால திருமண வாழ்க்கை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. ‘தி சிக்ஸ்த் சென்ஸ்’ திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் ஹேலி ஜோயல் ஆஸ்மென்ட்டின் தங்கையான எமிலி, தற்போது ‘யங் ஷெல்டன்’ தொடரின் கிளைக் கதையான ‘ஜார்ஜி அண்ட் மாண்டியின் முதல் திருமணம்’ என்ற தொடரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.