ஜம்மு- காஷ்மீரில் கடும் குளிர் பள்ளிகளுக்கு பிப். வரை விடுமுறை
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக கடும் குளிர் நிலவி வருவதால் பள்ளிகளுக்கு வரும் பிப்ரவரி 28ம் தேதி வரை குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக கடும் குளிர் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். குறிப்பாக குழந்தைகள், பெரியவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நகரில் கடந்த நேற்று முன்தினம் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 3 டிகிரி செல்சியசாக பதிவானது. இந்நிலையில் ஜம்முவின் குளிர் மண்டலம் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் குளிர்கால விடுமுறைக்கான அறிவிப்பை பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி நர்சரி மற்றும் கேஜி வகுப்புகளுக்கு நேற்று முதல் வரும் பிப்ரவரி 28 வரையிலும் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை டிசம்பர் 1 முதல் பிப்ரவரி 28ம் தேதி வரையிலும் 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு டிசம்பர் 11 முதல் பிப்ரவரி 22ம் தேதி வரையிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி விடுமுறை காலத்தில் ஆசிரியர்கள் எந்தவொரு கல்வி பணிக்கும் தயாராக இருக்க வேண்டும், பள்ளியை மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வரும் பிப்ரவரி 20ம் தேதி முதல் வர வேண்டும் என்றும் இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.