விடுமுறை தினத்தையொட்டி ஒகேனக்கல், ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்: குடும்பத்துடன் பரிசல், படகு சவாரி சென்று உற்சாகம்
ஏற்காடு: விடுமுறை தினமான இன்று ஒகேனக்கல் மற்றும் ஏற்காட்டிற்கு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.சேலம் மாவட்டத்தில் உள்ள ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். கடந்த சில நாட்களாக ஏற்காட்டில் மழை பொழிவால், ‘ஜில்’ கிளைமேட் நிலவி வருகிறது. வழக்கமாக மாலையில் நிலவும் குளு குளு சீதோஷ்ண நிலையில் நண்பகலில் இருந்தே துவங்கி விடுகிறது. இரவில் கடும் குளிர் நிலவுகிறது.
ஞாயிறு விடுமுறை தினமான இன்று காலையில் இருந்தே சுற்றுலாப்பயணிகள் வரத்தொடங்கினர். பனி மூட்டத்தை ரசித்தவாறு கார், பைக்குகளில் சுற்றுலா பயணிகள் வந்தனர். இதனால் ஏற்காடு அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, பகோடா பாயிண்ட், லேடீஸ் சீட், சேர்வராயன் கோயில், கிளியூர் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக, ஏற்காடு படகு இல்லத்தில், நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால், தள்ளுவண்டி கடைகள், ஓட்டல்களில் விற்பனை அதிகரித்தது.
இதேபோல் ஒகேனக்கல்லில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்கள், கர்நாடகத்தில் இருந்து இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்குள்ள முதலை பண்ணை, பூங்காவை ரசித்த பொதுமக்கள், எண்ணெய் மசாஜ் செய்து அருவிகளில் குளித்தும், குடும்பத்துடன் பரிசல் பயணம் செய்து காவிரியின் அழகை ரசித்தும் மகிழ்ந்தனர். அங்குள்ள மீன் வறுவல் கடை, ஓட்டல்களில் விற்பனை களை கட்டியது. மேட்டூர் அணை பூங்கா, இடைப்பாடி அடுத்த பூலாம்பட்டி, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்கும் இன்று சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.