ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி
தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 24,000 கனஅடியாக குறைந்துள்ளதால் மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகளுக்கு பரிசல் சவாரி செய்வதற்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது. அதேசமயம் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
கடந்த 3 நாட்களாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கர்நாடகாவில் இருந்து 45,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒகேனக்கல் காவிரி ஆறு பிலிகுண்டுலு வழியாக கடந்து சென்றது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக ஒகேனக்கல் வெறிச்சோடி காணப்பட்டது. நேற்று முதல் மழை குறைய தொடங்கியதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்தும் குறைய தொடங்கியது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 24,000 கனஅடியாக குறைந்தது.
இந்நிலையில் நீர்வரத்து குறைந்ததையடுத்து ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிக்க தொடங்கியது. தற்போது காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகளுக்கு பரிசல் சவாரி செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் நீரவரத்து 15,000 கன அடிக்கு கீழ் குறைந்தால் மட்டுமே சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவர்.