தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வரலாறு தெரியாமல் மிரட்டிப் பார்க்கின்றனர் திமுக போல வெற்றி பெற பகல் கனவு காண்கிறார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

சென்னை: ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு திமுகதான். இனி இப்படியொரு இயக்கம் இந்த மண்ணில் தோன்ற முடியாது. வரலாறு தெரியாதவர் நம்மை மிரட்டிப் பார்க்கிறார்கள். இன்னும் சில அறிவிலிகள் திமுகவைப் போலவே வெற்றி பெறுவோம் என்று பகல் கனவு காண்கிறார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுகவின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ‘திமுக 75’ அறிவுத்திருவிழா நிகழ்ச்சியை திமுக இளைஞர் அணி நடத்துகிறது. இதன் ஒருபகுதியாக, “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு-திமுக 75” நூல் வெளியிட்டு விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடந்தது.

Advertisement

இதில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நூலை வெளியிட்டார். இதனை பொதுச்செயலாளர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். விழாவில் திமுக இளைஞர் அணி செயலாளர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், அமைச்சர்கள் வெள்ளக்கோவில் சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் த.வேலு, ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, எழிலன், ஜெ.கருணாநிதி உள்ளிட்ட எம்எல்ஏக்கள், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, செல்வப்பெருந்தகை, மு.வீரபாண்டியன், ஈ.ஆர்.ஈஸ்வரன், வேல்முருகன், தமிமுன் அன்சாரி, அப்துல் சமது, நவாஸ்கனி, இந்து குழும தலைவர் என்.ராம், நக்கீரன் கோபால் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திருவள்ளுவர் கோட்டத்தில் நின்று சொல்கிறேன். தம்பி உதயநிதியின் கொள்கைப் பிடிப்புமிக்க செயல்பாடுகளைப் பார்க்கிறபோது, அய்யன் வள்ளுவர் சொன்னாரே, “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்!” என்ற குறளுக்கேற்ப உதயநிதி செயல்படுகிறார் என்று பெருமையுடன் சொல்கிறேன். அந்தப் பெருமையோடு அவருக்கு ஒரு வேண்டுகோளும் வைக்க விரும்புகிறேன். ஏன் என்னுடைய அன்புக்கட்டளை என்று கூட சொல்லலாம். இந்த அறிவுத்திருவிழாவை இத்தோடு நிறுத்திவிடாமல், தொடர்ந்து ஆண்டுதோறும் நீங்கள் நடத்திட வேண்டும். நிச்சயம் இளைஞரணி இதைச் சிறப்பாக நடத்தும் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப உண்டு.

சமூகத்தில் சரிபாதி மக்கள் படிப்பறிவு கூட இல்லாமல் இருந்த காலத்தில், குக்கிராமத்தில் இருக்கும் முடிதிருத்தும் சலூன் கூட மக்களின் சிந்தனையை திருத்தும் மையமாக செயல்பட்டது. சைக்கிள் கடை, டீக்கடை என்று ஒரு இடம் விடாமல், திராவிட இயக்க இதழ்களை ஒரு திமுககாரர் வாசிக்க, அவரைச் சுற்றி பத்து பேர் செவி வழியாகக் கேட்டு உலக வரலாற்றைத் தெரிந்து கொண்டார்கள். கிராமத்தில் இருக்கிறவர்களும் கியூபா புரட்சியை தெரிந்து வைத்திருந்தார்கள். ரஷ்யப் புரட்சியைப் பற்றி படித்து, ஊக்கமும் உறுதியும் பெற்றார்கள். இவ்வாறு நாம் பெற்ற வெற்றி என்பது இனி யாரும் படைக்க முடியாத வரலாற்றுச் சாதனை!

இந்த வரலாறு பற்றியெல்லாம் தெரியாத சிலர், நம்மை மிரட்டிப் பார்க்கிறார்கள்! இன்னும் சில அறிவிலிகள் திமுகவைப் போலவே வெற்றி பெறுவோம் என்று பகல் கனவு காண்கிறார்கள். திமுகவைப் போன்று வெற்றி பெற, திமுகவைப் போன்று உழைப்பும், அறிவும் தேவை. ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு திமுக தான். இனி இப்படியொரு இயக்கம் இந்த மண்ணில் தோன்ற முடியாது. இளைஞரணியினருக்கு நான் ஒரு கோரிக்கை வைக்க விரும்புகிறேன். இந்தப் புத்தகத்தில் இருக்கும் கட்டுரைகளை, காலத்திற்கு ஏற்ற மாதிரி, வீடியோக்களாக மாற்றி, சோஷியல் மீடியாவில் அனைத்து இளைஞர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.

நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், சோனியா காந்தி முதல்-அகில இந்தியத் தலைவர்கள் அனைவரும், தங்கள் பார்வையில் நம்மை அளவிட்டு எழுதியிருக்கிறார்கள்! ஒரு மாநிலக் கட்சியை, அகில இந்தியத் தலைவர்களும், மற்ற மாநிலத் தலைவர்களும் புகழ்ந்து எழுதுவது சாதாரணமாக நடந்துவிடாது! முக்கியமான தலைவர்கள் நம் இயக்கம் பற்றிச் சொன்ன கருத்துகளில் ஹைலைட்டாக ஒரு வரியை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றால், என் அன்புச் சகோதரர் ராகுல் காந்தி, “ஒடுக்குமுறையில் இருந்து மக்களை மீட்ட இயக்கம்” என்று சொல்லியிருக்கிறார். லாலு பிரசாத், “சமூகநீதிக்காக 75 ஆண்டுகள் போராடிய இயக்கம்” என்று பாராட்டியிருக்கிறார்.

சரத் பவார், “கூட்டாட்சியின் வலிமையான பாரம்பரியம்” என்று சொல்லியிருக்கிறார். சி.பி.ஐ. தேசிய செயலாளர் டி.ராஜா, சமத்துவத்தின் முகமாக நம்மை பார்க்கிறார். பரூக் அப்துல்லா, “மதச்சார்பின்மை மற்றும் ஒற்றுமைக்காகப் பயணிப்பவர்கள்” என்று சொல்லியிருக்கிறார்! அகிலேஷ், “எங்களுக்கும் திமுகவிற்கும் இருப்பது லட்சியங்களுக்கான உறவு” என்று சொல்லியிருக்கிறார். பீகார் மாநிலத்தின் முதல்வராக விரைவில் வர இருக்கக் கூடிய, நாம் எதிர்பார்த்திருக்க கூடிய சகோதரர் தேஜஸ்வி, நம்மை ஜனநாயகத்தின் தோழனாகப் பார்க்கிறார். அரவிந்த் கெஜ்ரிவால், “அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவைக் கட்ட நினைக்கும் இயக்கம்” என்று சொல்கிறார்.

இப்படி, இந்தியாவே போற்றும் இயக்கமாக நம்முடைய திமுக வளர்ந்திருக்கிறது. இந்தச் சாதனைகளும்- வளர்ச்சியும்தான் பலரின் கண்களை உறுத்துகிறது! நாம் பேசும், சமூகநீதி-சுயமரியாதை-மாநில சுயாட்சி-கூட்டாட்சி- ஆகிய கருத்துகள் இன்றைக்கு இந்தியா முழுமைக்கும் பரவிவிட்டது! “என்னடா இவர்களை தமிழ்நாட்டிலேயே முடக்க நினைத்தால், இந்தியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்களே” என்று கோபப்படுகிறார்கள். கொள்கை ரீதியாக திமுகவை வீழ்த்த முடியாததால், தேர்தல் ஆணையம் மூலமாக, குறுக்கு வழியில் வீழ்த்த முடியுமா என்று முயற்சி செய்கிறார்கள்!

அதுதான், எஸ்.ஐ.ஆர். ஏன் இந்த எஸ்.ஐஆர்.-ஐ அவசர அவசரமாக நடத்த வேண்டும்? தேர்தல் நெருக்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் இது வேண்டாம் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் சொல்லியும், ஏன் நடத்த வேண்டும்? இதையெல்லாம் காது கொடுத்து கேட்காமல், தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர். பணிகளை தொடங்கிவிட்டார்கள். இதற்கு எதிராகச் சட்டரீதியாகவும்-அரசியல்ரீதியாகவும் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம், தொடர்ந்து போராடப் போகிறோம், போராடுவோம், அது வேறு. களத்தில் வேலை செய்யும் நீங்கள், எந்தவொரு போலி வாக்காளரும் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உண்மையான நம்முடைய வாக்காளர்கள் விடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். யாருடைய வாக்குரிமையும் பறிபோகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காகக் களப்பணியாற்ற வேண்டும்.

நம் இயக்க வரலாறு முழுவதுமே போராட்ட வரலாறுதான்! நம்முடைய போராட்ட வரலாற்றை நினைவூட்டும் கொள்கைத் திருவிழாதான், இந்த அறிவுத் திருவிழா! முற்போக்கு விழாவாக, கருப்பு-சிவப்பு-நீலம்-சேர்ந்திருக்கும் போது எந்தக் காவியாலும் நம்மை எதுவும் செய்ய முடியாது! இந்தியாவின் ஜனநாயகத்தையும்-தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் காக்க-2019 முதல் தொடரும் நம்முடைய பயணம், 2026-லும் மாபெரும் வெற்றியைப் பெறும்! “திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும்!” பெரியாரின்- அண்ணாவின்-கலைஞரின்-இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின்-கொள்கை வாரிசுகள் இருக்கும் வரை, தமிழ்நாடு தலைகுனியாது! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு திமுக தான்

* ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு திமுக தான்.

* இனி இப்படியொரு இயக்கம் இந்த மண்ணில் தோன்ற முடியாது.

* இந்தியாவே போற்றும் இயக்கமாக நம்முடைய திமுக வளர்ந்திருக்கிறது.

* இந்தச் சாதனைகளும்- வளர்ச்சியும்தான் பலரின் கண்களை உறுத்துகிறது.

* கொள்கை ரீதியாக திமுகவை வீழ்த்த முடியாததால், தேர்தல் ஆணையம் மூலமாக, குறுக்கு வழியில் வீழ்த்த முடியுமா என்று முயற்சி செய்கிறார்கள். அதுதான், எஸ்.ஐ.ஆர்.

Advertisement