வரலாற்று உச்சத்தை தொட்ட நிலையில் தங்கம் விலை அதிரடி சரிவு: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1000 குறைந்தது
இதற்கிடையே நேற்று முன்தினம் யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதாவது அன்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,380க்கும், பவுனுக்கு ரூ.760 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.75 ஆயிரத்து 40க்கும் விற்பனையானது. இதன் மூலம் தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் வரலாறு காணாத உச்சத்தையும் பதிவு செய்தது. அதே நேரத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,240 வரை உயர்ந்தது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்தநிலையில், நேற்று தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. ஒரு கிராமுக்கு ரூ.125 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,255க்கும், பவுனுக்கு ரூ.1000 குறைந்து ஒரு பவுன் ரூ.74,040க்கும் விற்பனையானது. அதிரடியாக தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. அதே போல வெள்ளி விலையும் நேற்று குறைந்தது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.128க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதே அதிகம் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவே தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்று நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் திடீரென தங்கம் விலை குறைவதற்கும் வாய்ப்புள்ளது என்றனர்.