வெறும் பேச்சுமொழியாக மட்டும் செயல்படாமல் அறிவியல்,தொழில்நுட்பம்,நீதித்துறை மொழியாக இந்தி மாற வேண்டும்: உள்துறை அமைச்சர் அமித் ஷா விருப்பம்
காந்திநகர்: இந்தி வெறும் பேச்சு மொழியாக மட்டும் செயல்படாமல் அறிவியல்,தொழில்நுட்பம், நீதித்துறை மற்றும் காவல் துறையின் மொழியாக மாற வேண்டும் என ஒன்றிய அமைச்சர் அமித் ஷா விருப்பம் தெரிவித்தார்.
குஜராத்,காந்திநகரில் அகில பாரத ராஜ்பாஷா சம்மேளன கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: இந்தியர்கள் தங்கள் மொழிகளைப் பாதுகாத்து அவற்றை அழியாததாக மாற்ற வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளிடம் தங்கள் தாய்மொழியில்தான் பேச வேண்டும். இந்திக்கும் பிற இந்திய மொழிகளுக்கும் இடையே எந்த மோதலும் இல்லை.தயானந்த சரஸ்வதி, மகாத்மா காந்தி, கே.எம். முன்ஷி, சர்தார் வல்லபாய் படேல் போன்ற தலைசிறந்த மனிதர்கள் இந்தியை ஏற்றுக்கொண்டு அதை ஊக்குவித்தனர்.
குஜராத்தியும் இந்தியும் இணைந்து வாழ்ந்த குஜராத் மாநிலம், இரு மொழிகளின் வளர்ச்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. இந்தி வெறும் பேச்சு மொழியோ அல்லது நிர்வாக மொழியோ அல்ல. அறிவியல், தொழில்நுட்பம், நீதி மற்றும் காவல்துறையின் மொழியாகவும் இந்தி இருக்க வேண்டும். இந்தப் பணிகள் அனைத்தும் இந்திய மொழிகளில் செய்யப்படும்போது, பொதுமக்களுடனான தொடர்பு நிறுவப்படும். சமஸ்கிருதம் நமக்கு அறிவின் கங்கையை அளித்துள்ளது. மேலும் இந்தி இந்த அறிவை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சென்றுள்ளது. அந்த அறிவு உள்ளூர் மொழிகள் மூலம் ஒவ்வொரு நபரையும் சென்றடைந்துள்ளது.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.