வெள்ளத்தில் தத்தளிக்கும் இமாச்சல், காஷ்மீர்: தொலைத்தொடர்பு சேவை முடங்கியது
ஸ்ரீநகர்: இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீரில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அபாய அளவை தாண்டி வெள்ளம் செல்வதால் இமாச்சல், ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இமாச்சல் மாநிலத்தில் உள்ள மணாலியில் வெள்ளப்பெருக்கில் சாலையில் நின்ற வாகனம் அடித்துச் செல்லப்பட்டது. காஷ்மீரில் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூக்கு பாதுகாப்புக்குச் சென்ற வாகனம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரில் வைஷ்ணவி கோயிலில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பக்தர்கள் 6 பேர் காயம் அடைந்தனர். ஜம்முகாஷ்மீரின் கத்துவா, கதேர்வாஹ் உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடு இடிந்து விழுந்து 2 பேர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். கனமழை, வெள்ளத்தால் செல்போன், இணைய சேவை உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர்.
வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் உள்ள மக்களை ராணுவம் மீட்டு வருகிறது. இதனிடையே ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஜம்முவில் காட்டாற்று வெள்ளத்தில் பாலத்தின் பாதி பகுதி அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.