வழி கொள்ளையர்கள்போல் பாஜக ஆட்சியாளர்கள் வரி கொள்ளையடிக்கின்றனர்: பெ.சண்முகம் காட்டம்
கோவில்பட்டி: வழி கொள்ளையர்கள்போல் பாஜக ஆட்சியாளர்கள் வரி கொள்ளையடிக்கின்றனர் என மார்க்சிஸ்ட் செயலாளர் பெ.சண்முகம் கட்டமாக தெரிவித்துள்ளார். வழி கொள்ளையர்கள் போல் பாஜக ஆட்சியாளர்கள் வரி கொள்ளையடிக்கின்றனர் என்றும் மலை அளவு வாங்கிவிட்டு குறைப்பதை கடுகளவு குறைக்கிறார்கள் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் விளக்க பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் பேசியதாவது:
வழி கொள்ளையர்கள் போல பாஜக ஆட்சியாளர்கள் வரிகொள்ளையர்கள். ஜிஎஸ்டி வரி போடாத எந்த பொருளும் கிடையாது. வாங்குவதை மலை அளவு வாங்கிவிட்டு குறைப்பதை கடுகளவு குறைக்கிறார்கள். அதற்கு இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம். இதற்காக ஒவ்வொரு மாநகரமாக சென்று நிதியமைச்சர் விளக்க உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.
மக்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கவில்லை. ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை என்பது வரவேற்கக் கூடியது. எல்ஐசி மட்டுமின்றி பல தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் பயன் பெறும் வகையில் தான் ஜிஎஸ்டி ரத்து அறிவித்துள்ளனர்.மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க பாஜக அரசு மறுக்கிறது. மாநில உரிமைகளை பாதுகாப்பது, மாநிலங்களுக்கான அதிகாரத்தை பாதுகாப்பது, வரி உயர்வு, நிதி பாரபட்சம் என ஒன்றிய பாஜவுக்கு எதிராக தமிழகத்தில் திமுக அரசு போராடிக் கொண்டிருக்கிறது.
அதற்கு துணையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட தோழமை கட்சிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். கல்விக்கான நிதியை தர மறுக்கிறார்கள், பஞ்சாயத்துக்கான நிதியை தர மறுக்கிறார்கள், வரி வருவாயில் வரவேண்டிய உரிய பங்கினை தர மறுக்கிறார்கள், இது போன்ற எத்தனையோ அநீதிகளை தமிழகத்திற்கு ஒன்றிய பாஜக அரசு இழைக்கிறது. அதற்கு ஏற்றாற் போல் தமிழகத்தில் ஒரு கவர்னர் இருந்து கொண்டிருக்கிறார். அவர் மூலமாக எவ்வளவு குடைச்சல் கொடுக்க முடியுமோ அவ்வளவு குடைச்சலை தமிழ்நாடு அரசுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது பாஜக.
ஆகவே தான் திமுக ‘தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்’ என்று கோஷத்தை முன்வைத்து தமிழக முழுவதும் திமுக சார்பில் ஒன்றிய அரசுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. அது வரவேற்கத்தக்கது. மாநில உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ, மதவெறி, வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக தமிழக மக்களை அணி திரட்டுவது எவ்வளவு முக்கியமோ, தமிழக மக்களின் வாழ்வாதாரமும், பணியும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும் மிகவும் முக்கியம் என்ற அடிப்படையில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை முன் வைக்கிறது. தமிழக அரசின் பொருளாதாரக் கொள்கையில் மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.