கள்ளிக்குடி அருகே நெடுஞ்சாலையில் மேம்பால பணிகளுக்காக மின்கம்பங்கள் இடமாற்றம்
திருமங்கலம்: கள்ளிக்குடி அருகே சிவரக்கோட்டையில் புதியதாக அமைய உள்ள நான்குவழிச்சாலை மேம்பால பணிக்காக மின்கம்பங்களை இடமாற்றும் பணிகள் துவங்கியுள்ளன. பெங்களூர் - கன்னியாகுமரி நான்குவழிச்சாலையில் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம், கள்ளிக்குடி அருகே சிவரக்கோட்டை மற்றும் கள்ளிக்குடி ஆகிய 3 இடங்களில் புதியதாக மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இதற்கான பூமிபூஜை விருதுநகர் எம்பி மாணிக்கதாகூர் தலைமையில் நடைபெற்றது.
இந்து நிலையில், தற்போது சிவரக்கோட்டை மற்றும் கள்ளிக்குடியில் 4 வழிச்சாலையில் புதிய மேம்பாலபணிகள் துவங்கியுள்ளன. இதில் சிவரக்கோட்டையில் ரூ.27 கோடியில் புதியதாக மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய பாலம் செங்கபடை பிரிவு பகுதியில் துவங்கி மருதுபாண்டியர் சிலை வரையில் அமைகிறது. இதில் இருபுறமும் பொதுமக்கள் சாலையை கடக்க சுரங்கபாதை அமைக்கப்படுகிறது.
இந்தநிலையில் சிவரக்கோட்டை 4 வழிச்சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சாலையின் இருபுறமும் மின்கம்பிகள் செல்கின்றன. இங்கு புதியதாக மேம்பாலம் வரும் போது மின்கம்பிகள் இடையூறாக இருக்கும் என்பதால் நேற்று அந்த பகுதியில் உள்ள குறைந்த உயரம் கொண்ட மின்கம்பங்களை அகற்றி விட்டு செங்கபடை பிரிவு பகுதியில் புதியதாக மின்கம்பங்கள் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.