திருவாலங்காடு அருகே இருளில் மூழ்கிய உயர்மட்ட பாலம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
திருத்தணி: திருவாலங்காடு அருகே உயர்மட்ட பாலம் மின் விளக்குகள் இன்றி இருளி மூழ்கி காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். திருவாலங்காடு அருகே, என்.என்.கண்டிகை நெமிலி பகுதியில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே பல ஆண்டுகளாக தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கி, போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வருவது வழக்கமாக உள்ளது. இதனால், கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனையடுத்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டது. இதனால், திருத்தணியில் இருந்து என்.என்.கண்டிகை வழியாக ஆந்திராவில் சத்தியவேடு, நாகலாபுரம் பகுதிகளுக்கு சென்று வர போக்குவரத்து வசதி மேம்படுத்தப்பட்டது.
இதனால், சுமார் 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். உயர்மட்ட பாலத்தின் இருபுறமும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 50க்கும் மேற்பட்ட உயர் கோபுர மின் விளக்குகள் அமைத்து இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள், கிராம மக்கள் அச்சமின்றி பயணம் செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக உயர்மட்ட பாலத்தின் இருபுறமும் விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவில் இருள் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள், கிராம மக்கள் இவ்வழியாக சென்று வர அச்சமடைந்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.