வழக்கறிஞர்கள் கைது குறித்து விசாரிக்கும் ஒரு நபர் ஆணையத்திற்கான வசதி செய்து தர வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: வழக்கறிஞர்கள் மீதான காவல்துறையினரின் கைத நடவடிக்கை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் ஆணையத்துக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூய்மை பணிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர். வழக்கறிஞர்கள் மீதான கைது நடவடிக்கை குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி வி.பார்த்திபன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி ஜெ.நிஷாபானு தலைமையிலான அமர்வு, ஒரு நபர் ஆணையத்தை நியமித்த உத்தரவை நிறுத்தி வைத்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒரு நபர் ஆணையம் விசாரணையை தொடங்குமாறு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி அருள் முருகன் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு நபர் ஆணையம் அமைத்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.
அப்போது, ஒரு நபர் ஆணையத்துக்கு எந்த ஒத்துழைப்பும் வழங்கப்படவில்லை என்று வழக்கறிஞர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒரு நபர் ஆணையத்திற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமை. ஓய்வு பெற்ற நீதிபதி பார்த்திபன் தலைமையிலான ஆணையத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வரும் 24ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.