சென்னை உயர் நீதிமன்றம் எந்த உத்தரவும் போடவில்லை அன்புமணி நடத்திய பொதுக்குழு சட்ட விதிமுறைப்படி செல்லாது: ராமதாசுக்கு வெள்ளை துண்டை போட்டு நாடகம், பாமக பொதுச்செயலாளர் பரபரப்பு பேட்டி
திண்டிவனம்: அன்புமணி நடத்திய பொதுக்குழு சட்ட விதிமுறைப்படி செல்லாது, என பாமக பொதுச் செயலாளர் முரளி சங்கர் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று பாமக நிறுவனர், தலைவர் ராமதாசை சந்தித்து ஆலோசனை நடத்திய பின் பாமக பொது செயலாளர் முரளிசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது: அன்புமணி பொதுக்குழு நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதியும் அளிக்கவில்லை, தடையும் விதிக்கவில்லை, தலைவர் யார் என்பதே தற்போதைய பிரச்னையாக உள்ளது.
இது குறித்து உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்வு காணலாம் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் இதை காரணம் காட்டி அன்புமணி தரப்பினர் பொதுக்குழுவை நடத்தியுள்ளனர். பாமக தலைவர் அன்புமணியின் பதவி காலம் மே 28ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. தற்போது நடைபெற்ற பாமக பொதுக்குழு சட்ட விதிமுறைப்படி செல்லாது. மீண்டும் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு, செயற்குழு கூட்டி தான் முடிவு செய்ய முடியும். அன்புமணியின் பொதுக்குழுவில் ஐயா வருகிறார், ஐயா வரவில்லை என வெள்ளை துண்டை போட்டு அங்கு நாடகம் நடத்தி உள்ளனர்.
ஏன் இதை இரண்டு நாட்களுக்கு முன்பாகவே ராமதாசை சந்தித்து பொதுக்குழு கூட்டம் சம்பந்தமாக பேசியிருக்க வேண்டும். ராமதாசை சந்திக்காதது தான் அனைத்து பிரச்னைக்கும் காரணம். ராமதாசால், முன்னாள் எம்.எல்.ஏக்கள் எம்.பிக்கள் பதவி சுகத்தை அனுபவித்தவர்கள். அனைவரும் ஒன்று சேர்ந்து அன்புமணிக்கு புத்தி சொல்லி, மூன்று நாட்களுக்கு முன்பு அவரை ராமதாசிடம் தைலாபுரம் தோட்டத்து வீட்டில் விட்டுவிட்டு, வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தால் அனைத்து பிரச்னையும் தீர்ந்திருக்கும். அப்படி தீர்க்காமல் பதவி சுகத்திற்கு ஆசைப்பட்டு வருகின்றனர்.
ராமதாசைவிட உங்களுக்கு பதவி முக்கியமா, அவருக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை அவ்வளவு தானா, காட்டில், மேட்டில் சுத்தியவர்களை இன்று மந்திரியாகவும், எம்பியாகவும், எம்எல்ஏ ஆகவும் ஆக்கி உள்ளார். தங்களது பொருளாதாரத்தை வளர்த்து கொள்ள, ராமதாஸ் வழிகாட்டுதல் இல்லாமல் பொய்யான வழிகாட்டுதலோடு எப்படி நீங்கள் மக்களை சந்திப்பீர்கள். எப்படி தேர்தலை சந்திப்பீர்கள்.
ராமதாசை சந்தித்து அன்புமணி நடைபயணமாக இருந்தாலும் சரி, எந்த விஷயமாக இருந்தாலும் சரி, ஏன் தலைவராக இருக்க வேண்டும் என்றாலும் சரி, அவரை சந்தித்து இருந்தால் எல்லாம் சரியாகி இருக்கும். நேற்றைய தினம் கோர்ட்டில் ஜட்ஜ்மெண்ட் காப்பியை வாங்குவதற்கு வழக்கறிஞர் பாலுவும், வழக்கறிஞர்களும் காட்டிய அக்கறையை ராமதாஸ், அன்புமணியை ஒன்று சேர்த்து வைக்க காட்டி இருந்தால் ராமதாஸ் தற்போது ஓய்வில் இருந்திருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
* சொல்வதற்கு ஒன்றுமில்லை: ராமதாஸ் விரக்தி
தைலாபுரம் தோட்டத்தில் இருந்து நேற்று மாலை 3.30 மணியளவில் பூம்புகாரில் இன்று நடைபெறும் வன்னியர் சங்கத்தின் மகளிர் மாநாட்டிற்கு ராமதாஸ் காரில் புறப்பட்டு சென்றார். அப்போது செய்தியாளர்கள், அன்புமணி கூட்டிய பொதுக்குழு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு ராமதாஸ், ‘ஊடக நண்பர்களே, நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை, நாளை நடைபெறும் மகளிர் மாநாட்டுக்கு அனைவரும் வாருங்கள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் மாநாடு, உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்,’ என்று கூறி புறப்பட்டார். அவரது மூத்த மகள் ஸ்ரீகாந்திமதி உடன் சென்றார்
* ராமதாசுக்காக வந்த ஆம்புலன்ஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்திற்கு சேலத்தில் இருந்து நேற்று காலை தனியார் மருத்துவமனை சார்பில் ஆம்புலன்ஸ் ஒன்று தைலாபுரம் தோட்டத்திற்கு வந்தது. ஐசியுவில் இருக்கும் வடிவமைப்பு போல அதிநவீன மருத்துவ உபகரணங்களுடன் கூடிய வகையில் அந்த ஆம்புலன்ஸ் இருந்தது. ராமதாஸ் பூம்புகார் புறப்பட்டபோது, அந்த ஆம்புலன்ஸ் அவரது காருக்கு பின்னால் சென்றது.
* தைலாபுரம் தோட்டத்துக்கு கூடுதல் பாதுகாப்பு
தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தில் அவருக்கு பாதுகாப்புக்காக சுழற்சி முறையில் 6 போலீசார் இருந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று கூடுதலாக கிளியனூர் காவல் நிலையத்தில் இருந்து 4 போலீசார் வரவழைக்கப்பட்டு மொத்தம் 10 பேர் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.