ஐகோர்ட் மதுரை கிளையில் பணியில் இருந்தபோது துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை
மதுரை: ஐகோர்ட் மதுரை கிளையில் பணியில் இருந்த ஆயுதப்படை போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து ெகாண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழ்நாடு போலீசார் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீதிமன்ற பணிகள் முடிந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அனைத்து கேட்டுகளும் பூட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து நீதிமன்ற பாதுகாப்பு பணியில் ஆயுதப்படை போலீசார் ஈடுபட்டு வந்தனர். ஐகோர்ட் கிளை பிரதான நுழைவாயில் பகுதியில் துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்
மதுரை மாவட்டம் எழுமலை அருகே இ.கோட்டைப்பட்டியைச் சேர்ந்த மகாலிங்கம் (30) என்பவரும், எஸ்எல்ஆர் வகை துப்பாக்கியை ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று அதிகாலை 3 மணியளவில் பாதுகாப்பு பணியில் இருந்த மகாலிங்கம், துப்பாக்கியை வைத்துக் கொண்டு அங்கும் இங்குமாக நீண்ட நேரம் நடந்து ெகாண்டிருந்தார்.
இதை பார்த்த மற்ற காவலர்கள், ஒருவேளை பனியால் ஏற்படும் குளிர் தாங்காமல் அங்குமிங்குமாக நடக்கிறாரோ என எண்ணினர். அப்போது, தான் வைத்திருந்த எஸ்எல்ஆர் துப்பாக்கியின் முன்பகுதி தன்னை நோக்கி இருக்கும் வகையில் வைத்துக் கொண்டு திடீரென மகாலிங்கம் தனக்குத் தானே நெஞ்சில் சுட்டுக் கொண்டார். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்ப்பதற்குள் ரத்த வெள்ளத்தில் சுருண்டு கீழே விழுந்தார்.
தகவலறிந்து மதுரை மாநகர் போலீஸ் துணை கமிஷனர் அனிதா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த மகாலிங்கத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே மகாலிங்கம் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஐகோர்ட் கிளை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மணமாகாத ஏக்கத்தில் தற்கொலை செய்தாரா?
மகாலிங்கத்தின் தந்தை மாணிக்கம், தாய் பொட்டியம்மாள் ஆகியோர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 2023ல் காவல்துறையில் சேர்ந்த மகாலிங்கம், மதுரை பட்டாலியனில் பணியாற்றி வந்தார். இவருக்கு சுழற்சி முறையில் ஐகோர்ட் கிளையில் பணி வழங்கப்பட்டுள்ளது.
அரசு வேலையில் இருந்தும் தனக்கு திருமணம் ஆகவில்லையே என்ற மன வருத்தத்தில் இருந்துள்ளார். திருமணம் ஆகாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது இவரது பெற்றோரிடம் விசாரித்தப் பிறகே முழுமையாக தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். அதேசமயம் மகாலிங்கம் தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என கடிதம் எழுதி வைத்த பிறகே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.