அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!
சென்னை: அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வர வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் 1,823 இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் 268 இடங்கள் என 2,091 அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள் உள்ளன. அதுபோல் 1,360 பல் மருத்துவ இடங்களும் உள்ளன.
இந்நிலையில் 2025- 26 கல்வி ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மாணவா் சோ்க்கைக்கான முதல் சுற்று கலந்தாய்வு கடந்த மாதங்களில் முடிந்த நிலையில், மீதமுள்ள இடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு நடைபெற உள்ளது. 22 தனியார் மருத்துவ கல்லூரிகளிலும், 4 மருத்துவ பல்கலைக் கழகங்களிலும் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கல்விக் கட்டணம் ஆண்டுக்கு ரூபாய் 4.35 லட்சம் முதல் 4.50 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே நடைபெற்ற கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டில் இடங்களை பெற்ற மாணவர்களிடம் அரசு நிர்ணயித்ததை விட ரூபாய் 5 லட்சம் முதல் 15 லட்சம் வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று பெரும்பாலான தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்துவதாகவும், இதனை வெளியில் சொன்னால் மருத்துவ கல்வியில் தொடர முடியாது என்று அச்சுறுத்தவதாகவும் பெற்றோர்களிடமிருந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.
தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களின் இதுபோன்ற அணுகுமுறையை உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் ஏற்கனவே கடுமையாக எச்சரித்துள்ளன. மேலும், நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படக்கூடாது என்று மருத்துவக் கல்வி இயக்குனரகம் அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அப்படியிருந்தும் பெரும்பாலான தனியார் மருத்துவ கல்லூரிகளில் அதிக கட்டண வசூல் தொடர்வது கண்டிக்கத்தக்கது. அதிக கட்டணம் செலுத்தி படிக்க முடியாததால்தான் ஏழை, நடுத்தர குடும்பத்து மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்கலாம் என்று நாடி வருகிறார்கள். மேலும் ஏற்கனவே நீட் தேர்வுக்காக பயிற்சி மையங்களில் சில லட்சங்கள் செலவழித்து கடன் சுமையால் அவதிப்படும் நடுத்தர குடும்ப பிள்ளைகளிடம் அரசு நிர்ணயித்ததை விட 2, 3 மடங்கு கூடுதலாக கட்டணம் கேட்டு நிர்பந்தப்படுத்துவது அம்மாணவர்களின் மருத்துவ கனவுக்கு முட்டுக்கட்டை போடுவதாகும்.
எனவே, ஏழை, நடுத்தர குடும்பத்து பிள்ளைகளின் மருத்துவக் கனவையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, அரசு உடனடியாக தலையிட்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கூடுதல் கட்டாய கட்டண வசூலை தடுத்து நிறுத்த வேண்டும். அத்துடன் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்து வருபவர்களிடம் ரகசியமாக விசாரணை செய்து, கூடுதல் கட்டண கட்டாய வசூல் உறுதியாகும் பட்சத்தில் கல்லூரிகளிடமிருந்து அந்தத் தொகையை பெற்றுத் தருவதுடன், அத்தகைய கல்லூரிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.