3 மாணவர்களின் சஸ்பெண்ட் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் அஸ்லம், சயீத், நஹல், இப்னு ஆகியோர் படித்து வருகிறார்கள். இந்த நிலையில், விடுதியின் சுவர்களில் “ஜெய் பீம்” என்றும் “சுதந்திர பாலஸ்தீனம்” போன்ற வாக்கியங்களை எழுதியது தேச விரோதமான செயல்கள் என்று கூறி கல்லூரி நிர்வாகம் மூன்று பேரையும் சஸ்பெண்ட் செய்தது.
இதை எதிர்த்து மாணவர்கள் 3 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கல்லூரி உதவி பதிவாளர் மீதான பாலியல் புகார் தொடர்பாக மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பழிவாங்கும் நோக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக வாதிட்டார்.
நீதிபதி ஜி.கே. இளந்திரையன், மாணவர்களின் நடத்தையில் சில குறைபாடுகள் இருந்தாலும் மற்ற சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு மாணவர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.