நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதனை உடனடியாக கைது செய்ய வேண்டும் : காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு!
சென்னை : நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் யாதவுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் காலத்தை நீட்டிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் அவரை உடனடியாக கைது செய்ய உத்தரட்டுள்ளது. சென்னை தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அக்டோபர் 30 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
100 கோடி ரூபாயை விசாரணை நீதிமன்றத்தில் வைப்பு தொகையாக செலுத்த வேண்டும், சாட்சிகளை கலைக்க கூடாது ,30 ஆம் தேதி சரணடைய வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அவர் விடுவிக்கப்பட்டார். பின்னர், தேவநாதன் யாதவ் சரணடைய மேலும் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கியும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் தன்னுடைய ஜாமீன் நிபந்தனைகளை மாற்றி அமைக்க கோரி தேவநாதன் யாதவ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேவநாதன் யாதவ் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்ற மேலும் ஒரு மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
தனக்கு சொந்தமான சொத்துகளை விற்று பாதிக்கப்பட்ட முதலீட்டார்களுக்கு வழங்க தான் முயற்சி எடுத்து வருவதாகவும், ஆனால் சொத்து ஆவணங்களை காவல்துறை பறிமுதல் செய்து விட்டதால் கால தாமதம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய இடைக்கால ஜாமின் நாட்களில் தீபாவளி போன்ற விடுமுறை நாட்கள் இருந்ததால் நீதிமன்ற நிபந்தனைகளை நிறைவேற்ற சிரமம் ஏற்பட்டதாகவும் வாதிடப்பட்டது. காவல்துறை தரப்பிலும் முதலீட்டாளர்கள் சங்கம் தரப்பிலும் தேவநாதன் யாதவின் ஜாமீன் நிபந்தனைகளை மாற்றி அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தேவநாதன் யாதவ் மனுவை தள்ளுபடி செய்து அவரை கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார்.