ரூ.100 கோடி கிளப்பில் முதல் தென்னிந்திய ஹீரோயின்!
துல்கர் சல்மானின் வேஃபாரர் ஃபிலிம்ஸ் (Wayfarer Films) தயாரித்திருக்கும் படம் ‘லோகா - அத்தியாயம் 1 : சந்திரா’. டொம்னிக் அருண் இயக்கியிருக்கும் இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருக்கிறார். அவருடன் நஸ்லென், சாண்டி, சந்து சலீம் குமார், அருண் குரியன், விஜயராகவன், சரத் சபா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, துல்கர் சல்மான் மற்றும் டோவினோ தாமஸ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். மலையாளம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ.150 கோடிக்கு மேல் வசூலை கடந்து தற்போதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தென்னிந்தியாவில் முதல் முறையாக கதாநாயகியை மையமாகக் கொண்டு ரூ.100 கோடி வசூல் சாதனை செய்த படம் என்கிற வரலாற்றை உருவாக்கியிருக்கிறது இப்படம். இதில் நடித்த கல்யாணி பிரியதர்ஷன் தான் தற்போது இந்த சாதனைக்கு சொந்தக் காரர். இவர் பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிஸ்ஸியின் மகள் என்பது கூடுதல் தகவல். பழங்கால கட்டுக்கதைகள், ஆதிக்குடிகளின் கதைகளில் ஒன்றான கள்ளியங்காடு நீலி என்னும் யட்சியின் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப் பட்டிருக்கிறது இந்த ‘‘ லோகா சாப்டர் 1: சந்திரா’’. சந்திரா கதாபாத்திரத்தில் கல்யாணி பிரியதர்ஷன் ஹாலிவுட்டின் ‘‘வொண்டர்வுமன்’’, ‘‘மிஸ் மார்வெல்’’, ‘‘ கேப்டன் மார்வெல்’’ போன்ற சூப்பர்ஹீரோ பெண் கதாபாத்திரங்களுக்கு நிகராக தனது நடிப்பையும், தோற்றத்தையும் கொடுத்திருக்கிறார். பிரியங்கா சோப்ரா, கரண் ஜோஹர், அலியா பட் உள்ளிட்ட இந்தியப் பிரபலங்கள் பலரும் படத்தை பாராட்டி வரும் நிலையில் இப்படம் தற்போது எங்கும் வைரலாகி வருகிறது. மேலும் தென்னிந்திய சினிமாவில் இதுவே முதல் 100 கோடி வசூல் சாதனை படைத்த ஹீரோயின் படம் என்னும் புது வரலாற்றையும் உருவாக்கியிருக்கிறது.