கேரளாவுக்கு ரூ.30 லட்சம் ஹெராயின் கடத்தல்
*வடமாநில பெண் உட்பட 2 பேர் கைது
பாலக்காடு : எர்ணாகுளம் அருகே ரூ.30 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் கடத்தி வந்த அசாமை சேர்ந்த பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அசாம் மாநிலம் நவுகாவை சேர்ந்தவர்கள் நூர் அமீன் (29), ஹிப்ஜூல் நஹார் (25). இவர்கள் 2 பேரும் அசாமிலிருந்து கேரள மாநிலம் ஆலுவா ரயில் நிலையம் வந்து இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் பெரும்பாவூர் நோக்கி நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில், பெரும்பாவூர் காவல் நிலைய எஸ்.ஐ. அஜித் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, போலீசார் ஆட்டோவை தடுத்து நிறுத்தி நூர் அமீன் மற்றும் ஹிப்ஜூல் நஹாரிடம் விசாரணை நடத்தினர். இதில், 2 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.
இதனால், சந்தேகமடைந்த போலீசார் அவர்களின் உடமைகளை சோதனை செய்தனர். இதில், பெண் அணிந்திருந்த ஆடையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும், நூர் அமீன், ஹிப்ஜூல் நஹார் ஆகிய 2 பேர் மீது பெரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.