ஹெலனிக் சாம்பியன்ஷிப் டென்னிஸ் ஜோகோவிச் சாம்பியன்: 38 வயதில் 101வது பட்டம்
ஏதென்ஸ்: ஹெலனிக் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியில் செர்பியாவை சேர்ந்த ஜாம்பவான் வீரர் நோவக் ஜோகோவிச் அபார வெற்றி பெற்று 101வது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தார். கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் ஹெலனிக் சாம்பியன்ஷிப் ஆடவர் டென்னிஸ் போட்டிகள் நடந்து வந்தன. நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிப் போட்டியில் செர்பியாவை சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் (38), இத்தாலி வீரர் லொரென்ஸோ முசெட்டி (23) உடன் மோதினார். முதல் செட்டில் சிறப்பாக ஆடிய முசெட்டி, 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார்.
அதன் பின் சுதாரித்து அபார ஆட்டத்திறனை வெளிப்படுத்திய ஜோகோவிச், அடுத்த இரு செட்களையும் 6-3, 7-5 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார். அதன் மூலம், 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய ஜோகோவிச் 101வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார். அவருக்கு, ரூ. 10 கோடி பரிசும், 250 புள்ளிகளும் கிடைத்தன. இந்த வெற்றி மூலம், ஏடிபி சாம்பியன் பட்டத்தை மிக அதிக வயதில் (38) வென்ற சாதனையை ஜோகோவிச் அரங்கேற்றி உள்ளார்.