ஹெலிகாப்டர் விபத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்பட 8 பேர் உயிரிழப்பு: தேசிய துக்க தினமாக அறிவித்தது கானா அரசு
கானா: கானா நாட்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அமைச்சர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று கானா. இங்கு, தலைநகர் அக்ராவில் இருந்து அஷாந்தி பிராந்தியத்தில் உள்ள தங்க சுரங்க பகுதியான ஓபுவாசிக்கு நேற்று காலை 9.00 மணியளவில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சென்றது. அதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் எட்வார்டு ஒமானே பொவாமா, சுற்றுச்சூழல் அமைச்சர் அல்ஹாஜி முர்தாலா முகமது உள்ளிட்ட 8 அதிகாரிகள் பயணித்துள்ளனர். இந்த ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களில், அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து சிறிது நேரத்தில் அங்குள்ள வனப்பகுதியில் அந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. சிறிது சிரமத்திற்கு பிறகு விபத்து பகுதியை கண்டுபிடித்து சென்ற ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் ஹெலிகாப்டர் விபத்தில், அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் எட்வார்டு ஒமானே பொவாமா, சுற்றுச்சூழல் அமைச்சர் அல்ஹாஜி முர்தாலா, அதிகாரிகள் உள்பட 8பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, தேசிய துக்க தினமாகவும் கானா அரசு அறிவித்தது.