விடியவிடிய பலத்த மழை; பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
பொன்னை: வேலூர் மற்றும் ஆந்திராவில் விடியவிடிய பெய்த பலத்த மழை காரணமாக பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்தாலும் மாலை மற்றும் இரவில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் நேற்றும் பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில் காட்பாடி அடுத்த பொன்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாலையில் திடீரென பலத்த மழை பெய்தது.
அதேபோல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இரவு 8 மணி முதல் இன்று காலை வரை வேலூர் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விடிய விடிய இடியுடன் லேசானது முதல் பலத்த மழை பெய்தது. இதனால் பொன்னை ஆற்றில் இன்று காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஏரி, குளம், கிணறுகள் கிடுகிடுவென நிரம்பி வருகிறது. மேலும் விடியவிடிய பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி பொன்னையில் 49.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.