கேரளாவில் 5 நாட்களுக்கு பலத்த மழை: 7 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று முதல் 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த 4 மாதங்களாக பெய்து வரும் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் இன்னும் குறையவில்லை. கடந்த சில வாரங்களாக தென் கேரள பகுதிகளில் மழையின் தீவிரம் சற்று குறைவாக இருந்தது. இந்தநிலையில் அடுத்த 5 நாட்களுக்கு தென் கேரளா உள்பட மாநிலம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்யும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மியான்மர் கடற்கரை மற்றும் அதை ஒட்டிய கிழக்கு-மத்திய வங்காள விரிகுடாவில் ஒரு வளிமண்டல சுழற்சி உருவாகியுள்ளது.
இது படிப்படியாக மேற்கு நோக்கி நகர்ந்து செப்டம்பர் 25ம் தேதி வடக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்காள விரிகுடாவில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்புள்ளது. இதனால் கேரளாவில் இன்னும் ஒரு சில நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று திருவனந்தபுரம் முதல் இடுக்கி வரை 7 மாவட்டங்களுக்கும், நாளை எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா ஆகிய 6 மாவட்டங்களுக்கும், 27ம் தேதி கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் காசர்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.