கனமழை எச்சரிக்கை: எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..?
சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி. தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நீடிக்கிறது. தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (அக்.22) பிற்பகலில் தென் மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வட தமிழக, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
அதற்கடுத்து மேலும் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, நாளை (அக்.23) வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு வந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளது. இப்போது வரை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை நெருங்கும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது என்றும், இன்று அது புயலாக மாறுமா? என்பது குறித்த தகவல் வெளியாகும் என்றும் வானிலை ஆய்வு மைய தென் மண்டலத்தலைவர் அமுதா தெரிவித்திருந்தார். இந்நிலையில் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
* பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை;
கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை மாவட்டத்தில் இன்று (அக்.22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். அதே போல சேலம், புதுக்கோட்டை, பெரம்பலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
* பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை;
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று (அக்.22) விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், திருச்சி. காஞ்சிபுரம், புதுக்கோட்டை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருவாரூர். மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, சிவகங்கை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.