வியட்நாம், தாய்லாந்தில் கனமழை, வௌ்ளம்: 8 பேர் பலி; 35 பேர் மாயம்
ஹனோய்: சீனாவின் தெற்கில் உள்ள சான்யா நகரை கடந்த வாரம் தாக்கிய கஜிகி என்ற சக்தி வாய்ந்த வெப்ப மண்டல சூறாவளி தென்கிழக்கு ஆசிய நாடுகளை நோக்கி நகர்ந்தது. இதனால் வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகளில் கனமழை பெய்து வருகிறது. மணிக்கு 117கிமீ வேகத்தில் காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. தலைநகர் ஹனோய் உள்பட பல முக்கிய நகரங்கள் வௌ்ளத்தில் தத்தளிக்கின்றன. வடகிழக்கு வியட்நாமில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் 20செமீ மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள ஆறுகள் நிரம்பி வழிவதால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வியட்நாமின் வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் கனமழையால் ஏற்பட்ட வௌ்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மாயமாகி உள்ளார். 34 பேர் காயமடைந்துள்ளனர். இதேபோல் தாய்லாந்திலும் இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. தாய்லாந்தின் வடக்கு நகரமான சியாங் மாயின் பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் பலியானார். ஒருவர் மாயமாகி உள்ளார். தாய்லாந்தின் வடக்கு மாகாணங்களில் திடீர் வௌ்ளம், நிலச்சரிவுகளில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன.