விடிய விடிய கனமழை டெல்லியில் 7 பேர் பலி
புதுடெல்லி: டெல்லியில் நேற்று முன்தினம் இரவு கருமேகங்கள் சூழ்ந்து கனமழையை கொட்டி தீர்த்தது. விடிய விடிய பெய்த மழையால் நகரின் முக்கிய இடங்களில் தண்ணீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். தொடர்மழையால் ஜெய்த்பூரில் உள்ள மோகன் பாபா மந்திர் அருகே வீட்டின் சுற்றுச்சுவர் நேற்று காலை 9.30 மணியளவில் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி இருந்த 8 பேர் மீட்கப்பட்டு எய்ம்ஸ், சப்தர்ஜங் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு பரிசோதித்தபோது 2 சிறுமிகள், 2 பெண்கள் உள்பட மொத்தம் 7 பேர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். படுகாயம் அடைந்த ஹசிபுல்லுக்கு (27) சப்தர்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இவர், மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஜோர்தலபராவின் கங்காதாரியை சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இறந்த 7 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.