கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து உபரிநீர் திறப்பு
சென்னை: கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 200 கன அடி, புழல் ஏரியில் இருந்து 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது ஏரிக்கு நீர் வரத்து 405 கன அடியாக உள்ளது. பெய்யும் மழையைப் பொருத்து உபரிநீர் திறப்பும் அதிகரிக்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளனர்.
தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வலுப்பெறும் மலாக்கா ஜலசந்தி மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நிலவரப்படி மலேஷியா மற்றும் அதை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவுகிறது. இது, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது, மேலும் அதே திசையில் நகர்ந்து, இன்று தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக உருவெடுக்கும்.
குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதுவும் படிப்படியாக வலுப்பெற வாய்ப்புள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான மழை தொடரும். நவம்பர் 28 ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகையில் மிக கனமழையும், 29 ஆம் தேதி மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் மிக கன மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
டெல்டாவில் மழை சற்று தீவிரம் அடைந்து, 28, 29, 30 ஆகிய தேதிகளில் டெல்டா, சென்னை, திருவள்ளூர் வரை வடகடலோரப் பகுதிகளுக்கு தொடர் மழையை தரும்.. இதனால் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படக் கூடும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 200 கன அடி, புழல் ஏரியில் இருந்து 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பெய்யும் மழையைப் பொருத்து உபரிநீர் திறப்பும் அதிகரிக்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளனர்.