கனமழை எச்சரிக்கை காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என புதுச்சேரி அரசு அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மேலும் வெளியான அறிக்கையில்; "சென்னை மண்டல வானிலை ஆய்வு நிலையத்தின் 16-11-2025 நாளிட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கு தென்மேற்கே வங்ககடலில் குறைந்த காற்றழுத்த பகுதியானது நேற்றய தினத்தில் 1730 IST இருந்து நிலவி வருகிறது. அதனுடன் தொடர்புடைய மேல் வளிமண்டல சுழற்சி கடல் மட்டத்திலிருந்து 5.8 கி.மீ. உயரம் வரை தென்மேற்கு திசை நோக்கி சாய்ந்த நிலையில் பரவியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது மெதுவாக மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் 16-11-2025 முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். எனவே, மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் தங்கள் கிராமங்களில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள உரிமையாளர்களுக்கு தகவல் தெரியும் பொருட்டு இதனை உரிய வகையில் அறிவிப்பு செய்திடக் கேட்டுக்கொள்ளப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.