வாலாஜாபாத் - ஒரகடம் சாலையில் கால்நடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல்: உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இவை மட்டுமின்றி வாலாஜாபாத்தில் காவல் நிலையம், வங்கிகள், நூலகம், சார்பதிவாளர் அலுவலகம், ரயில் நிலையம், பேருந்து நிலையம், தபால் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன. மேலும், வாலாஜாபாத்தை சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த, கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கானோர் வாலாஜாபாத் வந்துதான் இங்கிருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஒரகடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்படும் தனியார் தொழிற்சாலைகளுக்கு பணியாற்ற நாள்தோறும் சென்று வருகின்றனர்.
மேலும் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும் வாலாஜாபாத் - ஒரகடம் சாலையில் காலையும், மாலையும் தொழிற்சாலைகளுக்குச் செல்லும் பேருந்துகள் மட்டுமின்றி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் நூற்றுக்கணக்கான பேருந்துகளும் இச்சாலை வழியாகத்தான் நாள்தோறும் சென்று வருகின்றன. இந்நிலையில், வாலாஜாபாத் நகர் பகுதியில் வளர்க்கப்படும் கால்நடைகள் நாள்தோறும் இந்த சாலை வழியாகத்தான் மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்லப்படுகின்றன.
அப்போது மெதுவாக நடந்து செல்லும் மாடுகளால் நீண்ட தூரம் சாலையில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகின்றன. இந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் நாள்தோறும் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும், இந்த வழியாக ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லும் ஆம்புலன்ஸ்களும் நாள்தோறும் வாகன நெரிசல்களில் சிக்கி தவித்து வருகின்றன.
இதுகுறித்து பலமுறை காவல்துறையிடம் புகார் தெரிவித்தும், இதுவரை குறித்த நேரத்தில் கால்நடைகளை அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை வளர்ப்போருக்கு செய்யவில்லை. எனவே, மாவட்ட காவல்துறை போக்குவரத்து நெரிசலை குறைக்க கால்நடை வளர்ப்பவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி, போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்துகின்றனர்.