தசரா கொண்டாட்டத்தை முடக்கிய கனமழை; மோடி, சோனியா நிகழ்ச்சிகள் ரத்து: பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட உருவபொம்மை
புதுடெல்லி: டெல்லியில் தசரா கொண்டாட்டத்தின் போது பெய்த கனமழையால், தலைவர்களின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, ராவணன் உருவபொம்மைகள் சேதமடைந்தன. வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் இருந்து வரும் காற்றின் வேகம் காரணமாக டெல்லியில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும், வரும் 5 முதல் 7ம் தேதி வரை வடமேற்கு இந்தியா முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், டெல்லியில் நேற்று நடைபெற்ற தசரா கொண்டாட்டங்கள் கனமழை கடுமையாகப் பாதித்தது. இதனால், ராவணன், கும்பகர்ணன், மேக்நாதன் ஆகியோரின் உருவபொம்மைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.
விழா மைதானங்கள் சேறும் சகதியுமாக மாறியதால், கொண்டாட்டங்கள் தாமதமடைந்தன. கனமழை காரணமாக, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கலந்துகொள்ளவிருந்த தசரா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. கிழக்கு டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா ராம்லீலா குழுவின் நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி செல்வது ரத்து செய்யப்பட்டது. பிதம்பூராவில் நடந்த நிகழ்ச்சிக்கு அமித் ஷாவால் செல்ல முடியவில்லை. செங்கோட்டை அருகே நடந்த ராவண தகன நிகழ்ச்சியில் சோனியா காந்தி பங்கேற்பதும் கைவிடப்பட்டது.
இருப்பினும், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுடன் வேறொரு ராம்லீலா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார். மழைக்குப் பிறகு, பல ராம்லீலா குழுக்கள் கொண்டாட்டங்களைத் தொடர்ந்தன. நனைந்த உருவபொம்மைகளை எரிப்பதற்காக பெட்ரோல் மற்றும் டீசலைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. மழை குறைந்ததும், பெரும் திரளான மக்கள் கூடி விழாவைக் கண்டுகளித்தனர்.