சாரல் மழையால் நெல் அறுவடை பணிகள் பாதிப்பு
*ஈரமாகி தரம் குறையும் அபாயம்
ஈரோடு : ஈரோடு காலிங்கராயன் வாயக்கால் பாசனப் பகுதிகளான சுண்ணாம்பு ஓடை, வைரபாளையம், கருங்கல்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழை காரணமாக, அறுவடை செய்யும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகள், விளைநிலத்திலேயே பிளாஸ்டிக் கவரால் மூடி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது : தற்போதைய சூழலில் விவசாயம் மீதுள்ள ஆர்வத்தால் தான் நெல் விவசாயம் செய்து வருகிறோம். கணக்கு பார்த்தால் நஷ்டம் தான் மிஞ்சும். சாதாரண தொழிலாளி ஒருவர் வாங்கும் சம்பளம் கூட 6 மாத காலம் பாடுபட்டு பயிரிடப்படும் ஒரு ஏக்கர் நெல் சாகுபடி மூலம் கிடைப்பதில்லை. இதனால் பெரும்பாலான விவசாயிகள் இருக்கும் வயல்களை விற்று பணமாக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பல விவசாயிகள் வாழை, மரவள்ளி கிழங்கு சாகுபடிக்கு மாறிவிட்டனர்.
மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் விளைவித்த நெற்பயிர்கள் திருப்தி தரும் வகையில் அதிக நெல்மணியுடன் உள்ளது. ஆனால் சாரல் மழையால் அறுவடை செய்ய முடியாமல் தவித்து வருகிறோம்.
மழை தொடர்ந்து பெய்தால் நெல் முழுமையாக அறுவடை செய்ய முடியாமல் நஷ்டம் ஏற்படும்.அதுமட்டுமின்றி, சாரல் மழைக்கு மத்தியில் அவ்வப்போது வெயிலடிப்பதை பயன்படுத்தி அறுவடை செய்யும் பட்சத்தில் சிறு தூறல் வந்தால் கூட நெல்மணிகள் ஈரமாகி தரம் குன்றும் சூழ்நிலை ஏற்படும். இதனால் உரிய விலைக்கு விற்க முடியாமல் நஷ்டம் ஏற்படும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.