திருவண்ணாமலை மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை
ஆரணி : தமிழகத்தில் வளிமண்டலத்தில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகி இரவு நேரங்களில் பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் அணைகளில் நீர் மட்டும் உயர்ந்து அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் ஆற்றுப்படுகையில் செல்வதால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் விடிய விடிய கன மழை பெய்தது. சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் ஓடியது. மேலும் ஆரணி டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஆரணி டவுன் பகுதியில் கோட்டை மைதானத்தில் அதிகளவில் மழைநீர் தேங்கியது.
பெரணமல்லூர் சுற்றுப்புற பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய விடிய சுமார் 54 மிமீ அளவிற்கு கொட்டி தீர்த்தத்தால் நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் நிரம்பி வழிந்து ஏரிகளுக்கு செல்வதால் ஏரியில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. இதேபோல் சேத்துப்பட்டிலும் அதிகளவு மழை பெய்தது.