கிருஷ்ணகிரியில் வெளுத்து வாங்கிய மழை தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: 3 மாவட்டங்களுக்கு 2வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கன மழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி,திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்ட கரையோர மக்களுக்கு 2வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கிறது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வழிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு 10 மணி முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடியவிடிய கன மழை பெய்தது. கிருஷ்ணகிரி, ஓசூர், நெடுங்கல், பாரூர் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த கன மழை கொட்டித்தீர்த்தது. தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்ததால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருந்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இன்று காலை 8 மணி நிலவரப்படி, கிருஷ்ணகிரியில் அதிகபட்சமாக 120 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
கிருஷ்ணகிரி நகர பகுதியில் நேற்று இரவு கன மழை பெய்தது. இதனால், சின்னஏரி நிரம்பி அதன் உபரி நீர் புதூர் ஏரிக்கு செல்கிறது. மற்றொருபுறம் நகர பகுதியான கிருஷ்ணா காந்தி நகர், மோகன்ராஜ் காலனி, பழைய பேட்டை பஸ் நிலையம், பாப்பாரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. 50 க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வெளியே வர முடியாத படி துண்டிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த கிருஷ்ணகிரி நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.