தெலங்கானாவில் மேக வெடிப்பால் கனமழை வாலிபர் பலி; 3 பேர் மாயம்: குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது
திருமலை: தெலங்கானாவில் நேற்றிரவு மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழையில் சுவர் இடிந்து விழுந்து வாலிபர் பலியானார். 3 பேர் கால்வாயில் அடித்து செல்லப்பட்டு மாயமானார்கள். தெலங்கானா மாநிலம் ஐதராபாத், செகந்திராபாத், முஷீராபாத் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். ஆசிப் நகரில் உள்ள அப்சல்சாகரில் மங்காருபஸ்தி ராமு, அர்ஜூன் ஆகியோரும், செகந்திராபாத்தில் உள்ள பார்சிகுட்டா வினோபநகர் பகுதியில் தினேஷ் என்பவரும் வடிநீர் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அதேபோல் கச்சிபவுலியில் வட்டினகுலப்பள்ளியில் 10.5 அடி உயர சுவர் இடிந்து விழுந்ததில் 24 வயது தொழிலாளி பலியானார். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
கனமழையால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து முடங்கியது, தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. போலீசார், தீயணைப்புபடை வீரர்கள், மாநில பேரிடர் மீட்பு படையினர் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தவித்து வந்தவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து வருகின்றனர். ஐதராபாத்தில் 33.9மி.மீ, முஷீராபாத் மற்றும் பவுதாநகரில் 121 மி.மீ, ஜவஹர்நகரில் 112.8 மி.மீ, உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் 101.8 மி.மீ., ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள அப்துல்லாபூர்மெட் மண்டலத்தில் 127.5 மி.மீ. மழையும் பதிவானது.