தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கொட்டிய கனமழை: செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
மதுரை: தமிழ்நாட்டின் மதுரை, கும்பகோணம், கடலூர் பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. திருத்தணியில் நான்கு நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில், வானிலை மாறி சுமார் 2 மணி நேரம் கனமழை வெளுத்துவங்கியது. திருத்தணி நகரம் அரசு மருத்துவமனை பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திருத்தணி முருகன் கோயில் படிக்கட்டுகளில் அருவி போல மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மதுரையில் நேற்று காலை முதல் வெயில் கொளுத்திய நிலையில், நேற்று மாலையில் கனமழை கொட்டியது.
ஆட்சியர் அலுவலகம், அண்ணா பேருந்து நிலையம், சிம்மக்கல், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி, அவனியாபுரம், தெற்கு வாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை கொட்டியதால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்தது. மேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான அழகர் கோயில், வல்லாளப்பட்டி, தனியாமங்கலம் உள்ளிட்ட இடங்களில் நேற்று மாலையில் ஒருமணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. கும்பகோணம், தாராசுரம், சுவாமிமலை, பாவநாசம், திருபுவனம் உள்ளிட்ட இடங்களில் அரைமணி நேரத்திற்கு மழை பெய்தது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம், நெய்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சட்டமங்கலம், அரசுக்குழி ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டை, புதுப்பேட்டை, லண்டன் பேட்டை மற்றும் புறநகர் பகுதியான வெங்கடாபுரம், கட்டிகானப்பள்ளி, காவேரிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலையில் சுமார் அரைமணி நேரம் மழை கொட்டியது. இதுபோல் பெரம்பலூர், அவிநாசி, ஓசூர், பரமக்குடியிலும் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.