திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை; ஏரிகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு: வெளியேற்றம் அதிகரிப்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்த்தேக்கங்கள் நிரம்பி வருகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 2699 மில்லியன் கன அடியாக உள்ளது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணை மற்றும் அம்மம்பள்ளி அணை, ராணிப்பேட்டை மாவட்டம் கேசவாரம் அணை மற்றும் வரத்துக் கால்வாய்கள் மூலம் பெறப்படும் நீர், மழைநீர் என்று நீர்வரத்து வினாடிக்கு 13960 கன அடியாக உள்ளது. இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 300 கன அடியும் பேபி கால்வாய் வழியாக 47 கன அடியும் மேலும் நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 9500 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 2929 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 760 கன அடியாகவும் சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 165 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. ஏரியில் இருந்து வினாடிக்கு 750 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 2701 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 375 கன அடியாக உள்ளது. சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 184 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. ஏரியில் இருந்து வினாடிக்கு 500 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 654 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 668 கன அடியாக உள்ளது. கண்ணன்கோட்டை ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 439 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 20 கன அடியாக உள்ளது. ‘‘திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையின் காரணமாக மொத்த கொள்ளளவான 11757 மில்லியன் கன அடியில் இன்று காலை 6 மணி நிலவரப்படி 9422 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது’ என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மழையில் நனைந்து முளைத்த நெல்
திருவள்ளூர் அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் 100 க்கும் மேற்பட்டவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த விவசாயிகள் கடந்த 40 தினங்களுக்கு முன்பு அறுவடை செய்து நெல்லை காயவைத்திருந்தனர். ‘’நெல் கொள்முதல் நிலையத்தில் கோணிப் பைகள் இல்லை, சணல் இல்லை ஆகிய காரணங்களை சொல்லி கடந்த 40 நாட்களுக்கு மேலாக நெல்மூட்டைகளை எடுக்காமல் அலைக்கழித்து வந்தனர்’ என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சில நாட்களாக பெய்துவரும் மழையின் காரணமாக அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகள் அனைத்தும் முளைத்துவிட்டது. இதனால் விவசாயிகள் கடும் வேதனையும் மன உளைச்சலும் அடைந்துள்ளனர். ‘’ஒவ்வொரு விவசாயிக்கும் சுமார் 10 முதல் 40 மூட்டைகள் வரை நெல் முளைத்துவிட்டது. சுமார் 500 மூட்டைகள் வரை வீணாகி உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்’ என்று விவசாயிகள் கூறுகின்றனர்.