டார்ஜிலிங்கில் பெருவெள்ளம்; நிலச்சரிவு பலி 28 ஆக உயர்வு: பாலம் உடைந்ததால் தனித்தீவான மிரிக்
கொல்கத்தா: டார்ஜிலிங்கில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. பாலம் உடைந்ததால் மிரிக் பகுதி தனித்தீவானது. மேற்குவங்கத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் அதி கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. துர்கா பூஜை விடுமுறை என்பதால் டார்ஜிலிங், கலிம்போங் போன்ற பகுதிகளுக்குச் சென்றிருந்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
டீஸ்டா, பாலசன் உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த தொடர் மழை மற்றும் நிலச்சரிவு விபத்துகளில் சிக்கி இதுவரை 28 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மிரிக் பகுதி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சிலிகுரியையும் மிரிக்கையும் இணைக்கும் முக்கிய இரும்புப் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், மிரிக் பகுதி முற்றிலும் துண்டிக்கப்பட்டு தனித்தீவாக மாறியுள்ளது. இதனால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 10 உட்பட முக்கிய சாலைகளும் நிலச்சரிவால் மூடப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என எச்சரித்துள்ளதால், பாதிப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.