இதய பாதிப்புக்கு சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆனதால் பூரண குணமடைந்து விட்டோம் என நினைப்பது தவறான நம்பிக்கை: அப்போலோ மருத்துவமனை நிறுவனர் டாக்டர் பிரதாப் ரெட்டி தகவல்
சென்னை: இதய பாதிப்புக்கு சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆனால் பூரண குணமடைந்ததற்குச் சமம் என்பது தவறான நம்பிக்கை, தொடர் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என அப்போலோ மருத்துவமனைகள் நிறுவனர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: இதய பாதிப்பு அல்லது மாரடைப்பிலிருந்து ஒருவர் உயிர் தப்பியதும், அவரது குடும்பத்தினரிடையே உண்டாகும் நிம்மதி, சந்தோஷம் என்பது இயல்பானது.
ஒரு வழியாக சிகிச்சை முடிந்து நோயாளி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வெளியேற தயாராகும் போது, “வாழ்க்கையில் மிக மோசமான காலக்கட்டத்தைக் கடந்துவிட்டோம்” என்ற நம்பிக்கை அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இருக்கும். ஆனால் உண்மையான சவால், மாரடைப்புக்காக ஒருவர் சிகிச்சைப் பெற்று டிஸ்சார்ஜ் ஆன பிறகே தொடங்குகிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆனால் பூரண குணமடைந்ததற்குச் சமம் என்ற தவறான நம்பிக்கை. உண்மையில், அறுவை சிகிச்சைக்குப் பிறகான, முதல் வருடம் பெரும்பாலான இதய நோயாளிகளுக்கு மிக மிக முக்கியமான காலகட்டமாகும். நோயாளியின் நிலையைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் நன்கு வடிவமைக்கப்பட்ட புனர்வாழ்வு திட்டம் முழுமையானதாக இருக்க வேண்டும்,
மருத்துவ மேற்பார்வையுடன் உடற்பயிற்சி, உடல்நல பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் மேற்கொள்ள வேண்டிய உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றம், வாழ்க்கை முறையில் செயல்படுத்த வேண்டிய திருத்தங்கள், மற்றும் உணர்வுப் பூர்வமான ஆதரவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரு ஒட்டுமொத்த பராமரிப்பாக செயல்படுத்த வேண்டும்.
குடும்பத்தினர் முதன்மை ஆதரவாளர்களாக ஆதரவு தெரிவிக்கவேண்டும். நோயாளி சிகிச்சையை பின்பற்றுவதை உறுதி செய்யவேண்டும். சக நோயாளிகளைக் கொண்டிருக்கும் குழுக்கள், நோயாளியின் தனிமையை குறைத்து, பகிரப்பட்ட ஒழுக்கத்தை வளர்ப்பதன் மூலம் வாழ்வின் மதிப்பைச் அதிகரிக்கின்றன. மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குத் திரும்புவது என்பது மறுவாழ்வு என்று அல்ல. அது ஒரு தொடர்ச்சியான பயணத்தின் தொடக்கமாகும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.