தமிழகத்தில் உண்ணி காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
சென்னை: தமிழகத்தில் உண்ணி காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கான வழிகாட்டுதகவல்களை மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: ரிக்கட்ஸியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள் மனிதர்களை கடிக்கும்போது, அவர்களுக்கு ஸ்கரப் டைபஸ் காய்ச்சல் ஏற்படுகிறது. காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு மற்றும் தடிப்புகள் அதன் முக்கிய அறிகுறிகளாக உள்ளன. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் ஸ்கரப் டைபஸ் தொற்று பாதிப்பு இருந்து வருகிறது. இவைதவிர கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும்
ஸ்கரப் டைபஸ் தொற்று காணப்படுகிறது.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் அந்த பாதிப்பு அதிகரித்து வருவதால் சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நோய் பரவல் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து, அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகள், புதர் மண்டிய மற்றும் வனப்பகுதிகளுக்கு அருகே வசிப்பவர்கள், மலையேற்றத்தில் ஈடுபடுவோர், கர்ப்பிணிகள், பூச்சிக் கடிக்குள்ளாகும் சூழலில் இருப்போருக்கு இந்த பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
எலிஸா ரத்த பரிசோதனை மற்றும் மூலக்கூறு பரிசோதனைகள் மூலமாக இந்த நோயை கண்டறிய முடியும். ஸ்கரப் டைபஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அசித்ரோமைசின், டாக்ஸிசைக்ளின் போன்ற ஆன்ட்டி பயாடிக் மருந்துகளை அளித்து சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த பாதிப்புக்கு கடந்த ஆண்டில் 5,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் 4,000-க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது, 10 முதல் 20 பேர் வரை தினமும் பாதிப்பு அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருகின்றனர். மலைப்பகுதிகள், புதர்ப்பகுதிகள் மட்டுமின்றி சமவெளி பகுதிகளிலும் அந்த பாதிப்பு கண்டறியப்படுகிறது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.