தலைமைச்செயலக சங்கம் அறிவிப்பு 22 ஆசிரியர் சங்கங்கள் ஸ்டிரைக்கில் பங்கேற்கும்
சென்னை: தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க தலைவர் வெங்கடேசன், செயலாளர் ஹரிசங்கர் ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக அரசு 4 ஆண்டுகளுக்கு பிறகு பழைய ஓய்வூதிய திட்டத்தினை நிறைவேற்றாமல் குழு அமைத்தது. அந்த குழு 30.9.2025க்குள் அறிக்கை அளிக்காமல் காலநீட்டிப்பு கோரியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பட்டை அணிந்து தலைமை செயலக பணியாளர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.டிசம்பர் இறுதிக்குள்ளாக ஓய்வூதியம் தொடர்பான கொள்கை முடிவினை அறிவிக்க வேண்டும். ஆட்சியாளர்களுக்கு தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தத்தை கொடுப்பதற்காக இன்று (18ம் தேதி) நடைபெறும் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் தலைமை செயலக பணியாளர்கள் அனைவரும் பங்கேற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, இன்று ஒரு அடையாள வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு உயர்நிலை, மேனிலைப் பள்ளிபட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழக ஆசிரியர் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் உள்பட ஜாக்டோ-ஜியோ அமைப்பில் இடம் பெற்றுள்ள 22 ஆசிரியர் சங்கங்கள் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.