ஹாட்ரிக் கோல் அடித்து ரொனால்டோ கெத்து: கால்பந்து ரசிகர்கள் பரவசம்; அல் நஸர் அபார வெற்றி
தோஅல்கார்வ்: சவுதி அரேபியாவின் அல் நஸர் கால்பந்து அணிக்காக ஆடி வரும் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, நட்பு ரீதியிலான போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தியுள்ளாார். கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி அரேபியாவின் அல் நஸர் அணிக்காக அடுத்த 2 ஆண்டுகள் கால்பந்து போட்டிகளில் ஆட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக, சம்பளம், போனஸ், அணியில் 15 சதவீத உரிமை உள்பட, ரூ. 6,000 கோடியை அல் நஸர் அணி நிர்வாகம், ரொனால்டோவுக்கு தரவுள்ளது. இந்நிலையில், வரும் 19ம் தேதி நடைபெறவுள்ள சவுதி சூப்பர் கோப்பை கால்பந்து அரை இறுதியில் அல் இத்திஹாத் அணிக்கு எதிரான போட்டியில் அல் நஸர் அணிக்காக ரொனால்டோ ஆடவுள்ளார்.
அதற்கு முன்னதாக, போர்ச்சுகலில் நடந்த நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் ரியோ ஆவ் அணிக்கு எதிரான போட்டியில் அல் நஸர் அணி நேற்று முன்தினம் மோதியது. இப்போட்டியின் முதல் கோலை அல் நஸர் அணியின் முகம்மது சிமாகான், 15வது நிமிடத்தில் போட்டார். அதன் பின் முதல் பாதி ஆட்டம் முடிவதற்கு முன், ரொனால்டோ அற்புதமாக ஒரு கோல் போட்டார். ஆட்டத்தின் பிற்பகுதியில் அவரே தொடர்ந்து மேலும் இரு கோல்களை போட்டு ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். இதன் மூலம், அல் நஸர் அணி, 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, நாளை நடக்கும் போட்டியில் யுடி அல்மெரியா அணியுடன் அல் நஸர் அணி மோதவுள்ளது.